மாடு மேய்த்தல் கேவலமா?
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் நான் சிறுவனாக இருந்த காலத்திலும் சரி, தற்போதைய காலத்திலும் சரி, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் கூறும் ஒரு பொதுவான வாக்கியம்: “நன்றாக படி, இல்லையெனில் மாடு மேய்க்க வேண்டியதுதான்.” சில நேரங்களில், “நீ மாடு மேய்ப்பதற்குதான் லாயக்கு,” என்று சிலரை மக்கள் திட்டுவதும் உண்டு. சில அரசியல் கட்சியினர், “அந்த கட்சிக்கு ஓட்டளித்தால், நீங்கள் அனைவரும் மாடு மேய்க்க வேண்டியதுதான்,” என்று ஏளனமாக பிரச்சாரமும் செய்தனர். இவற்றிலிருந்து பொதுவாக அனைவரும் பெறக்கூடிய தகவல்: மாடு மேய்த்தல் என்பது கேவலமான ஒரு தொழில், எந்த தொழிலும் செய்ய திறனில்லாத மனிதர்களால் செய்யப்படும் தொழில். ஆனால் சமுதாயத்தின் பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்தோமெனில், மாடு மேய்த்தல் என்பது நிச்சயம் கேவலமானதல்ல; மாறாக, அஃது ஒரு புண்ணியமான தொழில் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மாடு மேய்த்தால்—கிடைக்காது மாடு மேய்ப்பதன் மகத்துவத்தை அறிவதற்கு முன்பாக, வேறு சில விஷயங்களை ஆராய்வோம். சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கிராமப்புற பகுதியில் சில வாரங்கள் நான் தங்கியிருந்தபோது, ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞரைச் சந்தித்தேன். உள்ளூரில் 6 ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள அந்த இளைஞர், சொந்த ஊரை விட்டு தொலை தூரம் சென்று, தொழிற்சாலை ஒன்றில் பணியாளராக பணிபுரிகிறார். அவரது நிலை ஒன்றும் அசாதாரணமானது அல்ல; கிராமத்திலுள்ள பல்வேறு இளைஞர்கள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து வருவது இந்தியாவின் அன்றாட நிகழ்வாகி விட்டது. இருப்பினும், “நீங்கள் ஏன் இங்கேயே விவசாயம் அல்லது பசு பராமரிப்பில் ஈடுபடக் கூடாது?” என்று அந்த இளைஞரிடம் நான் வினவினேன். அவரது பதில் எதார்த்தமாகவும் உடனடியாகவும் வந்தது. “விவசாயம் செய்தாலும் மாடு மேய்த்தாலும் யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள், சாமி.” அந்த பதில் முதலில் எனக்கு சற்று நகைப்பைக் கொடுத்தது. ஆயினும் அதன் ஆழத்தை உணர்ந்தபடி தொடர்ந்து வினவினேன்: “விவசாயம் செய்யும் உங்களின் தந்தை எவ்வளவு சம்பாதிக்கின்றார்?” “சுமார் இருபதிலிருந்து முப்பதாயிரம் வரை மாத வருமானம் உள்ளது.”
“உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”
“ஆறாயிரம் ரூபாய்.” https://media.tamilbtg.com/uploads/2016/10/Image-1-3.jpg
கிராமங்களிலுள்ள பாம்புகளைக் கண்டு அஞ்சும் மக்கள் நகரங்களிலுள்ள போக்குவரத்து சாதனங்களைக் கண்டுஅஞ்சாமல் இருப்பது ஏனோ?
நகரமயமாக்கம் கிராமங்களிலிருந்து மக்களை நகரத்திற்கு மாற்ற வேண்டும் என்பது சுயநலம் கொண்ட சில தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் திட்டம்; நகரங்களில் அதிகமான மக்கள் குடியேறினால் இவர்கள் நாலு காசு அதிகமாக சம்பாதிக்கலாம் என்பதே நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, நகரங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களையும் கிராமங் களைப் பற்றிய கெட்ட அபிப்பிராயங்களையும் அப்பாவி மக்களின் மனதில் சூட்சுமமாக பதிய வைக்கின்றனர். நகரங்களில் வாழ்பவர்கள் ஏதோ ஸ்வர்கத்தில் வாழ்வதுபோன்ற ஒரு மாயையில் வைக்கப்படுகின்றனர். “என் மகன் டவுன்ல வேலை செய்கிறான்,” என்று சொல்வதில் கிராமத்தினரும், “என் மகன் சென்னையில் வேலை செய்கிறான்,” என்று சொல்வதில் நகரத்தினரும், “என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறான்,” என்று கூறுவதில் சென்னைவாசிகளும் மகிழ்ச்சியடைகின்றனர். என்ன வேலை செய்கிறான், அந்த வேலையால் என்ன பலன், என்ன விளைவுகள், அதனால் அவன் மகிழ்ச்சியாக உள்ளானா—இதையெல்லாம் யோசிக்கும் சீரான மனோநிலையில் நம்மவர்கள் இல்லை. நகர வாழ்வின் சில சொகுசுகளில் மயங்கும் பொதுமக்கள், அதிலுள்ள பல்வேறு பிரச்சனைகளைக் காணத் தவறிவிடுகின்றனர். உதாரணமாக, நகர வாழ்க்கை மனிதனின் ஆயுளை வெகுவாகக் குறைக்கின்றது, மற்றும் பல்வேறு புத்தம்புதிய நோய்களை உருவாக்குகின்றது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களோ நகரத்தில் இருப்பதால்தான் இவ்வளவு வியாதிகள் வருகின்றன என்பதை அறியாதது மட்டுமின்றி, நகரத்தில் வாழ்வதால் இந்த வியாதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு எளிதாக உள்ளது என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொள்கின்றனர். (நகரமயமாக்கத்தின் காரணங்களும் விளைவுகளும் இங்கே விரிவாக விவாதிக்கப்படவில்லை.) பாம்புக்கடியும் சாலை விபத்துகளும் கிராம வாழ்வைக் காட்டிலும் நகர வாழ்வு சிறந்தது என்று நினைப்பவர்கள் அடிக்கடி கூறுவது: கிராமங்களில் நிறைய பாம்புகள் உள்ளன, வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் பாம்புகளைக் காட்டிலும் மோசமான போக்குவரத்து சாதனங்களைப் பற்றி நகரவாசிகள் எண்ணிப் பார்க்காதது ஏன்? அவை பாம்புகளைக் காட்டிலும் கொடியவை ஆயிற்றே. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கட்தொகையில் 72.18 சதவிகித மக்கள் கிராமங்களிலும் 27.82 சதவிகித மக்கள் நகரங்களிலும் வசிக்கின்றனர். அதே வருடத்தில் பாம்புக்கடியால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000. ஆனால் 27 சதவிகித நகரவாசிகளில் போக்குவரத்து விபத்துகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2 இலட்சம்; மேலும், உடல் உறுப்புகளை இழந்தவர்களோ ஏராளம். புள்ளியியல் விவரங்கள் இத்தகவலைத் தரும் வேளையில், சில பேராசை கொண்ட அயோக்கியர்கள் பாம்புகளைக் காட்டி மக்களை நகரத்திற்கு வலைக்கப் பார்க்கின்றனர். பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் சராசரி வாழ்வைத் தொடர முடியும்; சாலை விபத்துகளில் உயிர் பிழைத்தவர்களோ பெரும்பாலும் ஏதாவது ஓர் உறுப்பை இழந்து வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டும். https://media.tamilbtg.com/uploads/2016/10/Image-2-2.jpg
பசுக்களை வளர்ப்பதும் மேய்ப்பதும் இன்பமான தொழில் என்பதை வெளிப்படுத்திய ஸ்ரீ கிருஷ்ணர்.
தொழில்மயமாக்கம் சுதந்திர இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், “தொழிற்சாலைகளே நவீன இந்தியாவின் கோயில்கள்,” என்று எடுத்துரைத்து, தொழிற்சாலைகளை பெருக்கும்படி இந்தியர்களை வேண்டிக் கொண்டார். அதன் பின்னர், உலகெங்கிலும் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த தொழிற்புரட்சி இந்தியாவிலும் படிப்படியாக தொடங்கியது. பாரம்பரியம் மிக்க இந்திய நாட்டின் பெரும்பாலான மக்கள் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயார் செய்து, எந்தவித சிரமங்களும் இன்றி எளிய வாழ்வுடன் பாரதத்தின் ஈடுஇணையற்ற ஆன்மீகப் பண்பாட்டினைப் பின்பற்றி செவ்வனே வாழ்ந்து வந்தனர். ஆனால் சில பணப் பித்தர்களின் பேராசையால் விளைந்த தொழிற் புரட்சி எண்ணற்ற மக்களின் வேலையைப் பறித்து விட்டது.
மாடு மேய்ப்பது கேவலமான தொழில் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தியதில் தொழிற்புரட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தொழிற்புரட்சியின் ஆரம்பம் விவசாயப் புரட்சி; வேறு விதமாகக் கூறினால், விவசாயத்தினை வியாபாரமாக மாற்றுதல். அதன்படி, பெரும்பாலான விளைநிலங்களில் காளை மாடுகளுக்குப் பதிலாக டிராக்டர்கள் உபயோகத்திற்கு வந்தன, காளை மாடுகளுக்கோ வேலையில்லாமல் போயிற்று. முதல் விளைவு: பெரும்பாலான காளை மாடுகள் கசாப்புக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. இரண்டாம் விளைவு: பால் நின்றுபோன பசு மாடுகளும் கொஞ்சம்கூட மனசாட்சியின்றி கசாப்புக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. மேலும், தொழிற்புரட்சி என்ற பெயரில் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்ற போர்வையில், எத்தனை எத்தனையோ விதைகளும் உரங்களும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றை உபயோகித்த நிலத்தில், அவையின்றி விளைச்சல் இல்லை என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அவற்றில் விளைந்த பொருட்களை உண்ணும் மக்களோ எண்ணற்ற புதிய நோய்களுக்கு உட்படுத்தப்பட்டனர். மாடு மேய்ப்பதை மட்டம் தட்டுதல் இவ்வாறு படிப்படியாக, பசுக்களும் காளைகளும் தங்களின் மதிப்பை இழக்கும்படி செய்தனர் பணப் பித்துப் பிடித்த சுயநலவாதிகள். இருப்பினும், இந்தியாவின் பெரும்பாலான மக்கள் பசு பராமரிப்பினை புண்ணியமாகக் கருதினர். இந்த எண்ணத்தினைத் தகர்க்க மக்களிடையே கொண்டு வரப்பட்ட ஒரு மாயையே: மாடு மேய்த்தல் தரக்குறைவான பணி என்ற எண்ணம். தனது பொருளினை சந்தையில் விற்க விரும்பும் ஒரு வியாபாரி மற்றொரு வியாபாரியின் பொருளைப் பற்றி தரக்குறைவாக கூறுவதும் அதுகுறித்த புரளிகளைக் கிளப்பி விடுவதும் வழக்கம். அதுபோல, இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை நிலைநாட்ட விரும்பிய சிலர், மாடு மேய்ப்பதை தரக்குறைவாக பேசி வேலைக்கு ஆட்களைச் சேர்த்தனர். மாடு மேய்ப்பதை மட்டம் தட்டவில்லை என்றால், முற்றிலும் அபாயகரமான தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்திற்கு மணிக்கணக்கில் கடுமையான வேலைகளைச் செய்ய யார் முன்வருவர்? ஆனால், இன்றைய உலகிலோ, யாருக்கேனும் அடிமையாக சம்பளத்திற்கு வேலை செய்வது மாடு மேய்ப்பதைக் காட்டிலும் சிறந்தது என்னும் தவறான எண்ணத்தினை மக்களிடம் பதித்து விட்டனர் தொழிலதிபர்கள்.
எப்படிப் பார்த்தாலும், தொழிற்சாலைகளில் தயாராகும் போல்டு நட்டுகளை மனிதர்களால் உண்ண முடியுமா? அல்லது கம்ப்யூட்டர் சிப்ஸ்களை (பாகங்களை) உண்ண முடியுமா? நிச்சயம் இயலாது. பசுக்களும் பால் பொருட்களும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத் தேவை. இருப்பினும், மாடு மேய்ப்பதை மட்டம் தட்டி மட்டம் தட்டி தங்களின் தொழிலை வளர்த்த சில பெரியோர்களால், மாடு மேய்த்தல் கேவலமானது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றிவிட்டது. மக்களிடம் இந்த எண்ணம் எழுவதற்கு, கொள்ளையடிக்கத் துடிக்கும் நம் நாட்டின் அரசியல்வாதிகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மாடு மேய்ப்பவரிடம் கொள்ளையடிக்க முடியுமா? இன்று அதிலும் கொள்ளையடிக்கிறார்கள் என்றபோதிலும், நகர வாழ்வில் அவர்களுக்குக் கிடைக்கும் இலாபங்கள் அதிகம்; அதனால் நிச்சயம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் பசு பராமரிப்பினை ஆதரிக்கப் போவதில்லை. https://media.tamilbtg.com/uploads/2016/10/Image-3-1.jpg
கிருஷ்ணரும் பலராமரும் விருந்தாவனத்தில் இன்பமாக பசுக்களை மேய்த்தல்.
பசுக்கள் வழங்கும் செல்வம் தொழிற்புரட்சியின் காரணத்தினால், இன்று மாடுகளை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே நன்மை, பால். வேறு நன்மைகள் ஏதுமில்லை என்பதால், எதற்காக மாடு வளர்க்க வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். ஆனால் பாலுக்காக மட்டும் மாடுகளை வளர்க்காமல், மற்ற பயன்பாடுகளுக்கும் அவை உபயோகிக்கப்படும்போது, மாடுகளை மேய்த்தல் என்பது மிகுந்த இலாபம் தரும் பணியாக அமையும். காளை மாடுகள் உழுவதற்கு உபயோகிக்கப்பட வேண்டும்; மாடுகளின் கோமியமும் சாணமும் உரமாக உபயோகிக்கப்பட வேண்டும்; அவற்றிலிருந்து பல்வேறு மருந்துப் பொருட்களையும் தயாரிக்கலாம். அப்போது விவசாயிகளுக்கு அதிக செலவும் இருக்காது, நிலங்களும் வீணாகாது, மக்களுக்கு அதிக நோய்களும் வராது, மாடுகளும் கசாப்புக் கூடங்களுக்குச் செல்லாது, உலகமும் செல்வச் செழிப்புடன் திகழும்.
பூமியில் வாழ்பவர்களில் மற்றவர்களுக்கு அதிகமான நன்மையை வழங்கும் உயிரினம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் பசுவே முதலிடம் பெறும். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவை மட்டுமின்றி, இயற்கை உரம், மருந்துப் பொருள்கள், சாண எரிவாயு என பல வகையிலும் பசுக்கள் மக்களுக்கு உதவுகின்றன. அவை எங்கே முறையாக பராமரிக்கப்படுகின்றனவோ, அங்கே செல்வத் திருமகளாம் லக்ஷ்மி நித்தியமாக குடியிருப்பாள். அன்பிற்குரிய தாயாக அவளை எண்ணினால், அவள் நிச்சயம் மகிழ்ச்சியுற்று அதிக நன்மையை மக்களுக்கு வழங்குவாள். மகிழ்ச்சியான பசுக்கள் அதிக பாலை வழங்குகின்றன என்பது வேதங்கள் கூறும் உண்மை; நவீன கால விஞ்ஞானிகளும் இதனை தங்களது ஆய்வுகளில் கண்டுள்ளனர். பாசத்துடன் வளர்க்கப்படும் பசுக்கள் தங்களுக்கு பிரியமான நபரைக் காணும்போதே பால் சுரக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆரோக்கியமான அந்த பசுக்கள் பல நேரங்களில் புல்வெளிகளைக்கூட தங்களது பாலினால் நனைத்துவிடுவதை நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் காண்கிறோம்.
மனிதர்களுக்கு பெயர் சூட்டி அழைப்பதைப் போலவே, வேத பாரம்பரியத்தில் மாடுகளுக்கும் பெயர்கள் சூட்டுவது வழக்கத்தில் இருந்தது. இன்றும் இந்தியாவின் சில கிராமங்களில் இப்பழக்கம் இருப்பதைக் காணலாம். அதாவது, பசுக்கள் இல்லத்தின் ஒரு உறுப்பினராக அன்புடன் பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அவற்றை வளர்ப்பவர்களுக்கு அளவற்ற செல்வத்தை அவை வழங்கும். பசுக்களும் தானியங்களுமே உண்மையான செல்வம்; அவற்றை வைத்திருப்பவர்களே செல்வந்தர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தான்யேன தனவான் கவயோ தனவான். வெற்றுக் காகிதப் பணம் உண்மையில் யாரையும் செல்வந்தராக்குவது இல்லை. பசுக்கள் வழங்கும் இன்பம் பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தால், போதுமான அளவு பாலை நாம் பெற முடியும். பால் பொருட்களை உண்பவர்கள் ஸாத்வீகமான வாழ்வினைப் பெற முடியும். அத்தகு வாழ்வு உண்மையான இன்பத்திற்கு வழிவகுக்கும். பால் மனிதர்களின் மூளைத் திசுக்களை சிறப்பாக இயங்கச் செய்கின்றன என்பதை நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுள்ளனர். பசுக்களினால் நல்லறிவு பெறும் மக்கள் துயரங்கள் அதிகமின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். மனித வாழ்வின் குறிக்கோள் தன்னுணர்வையும் நிரந்தர ஆனந்தத்தையும் அடைவதே. பசுக்கள் தன்னுணர்வினை அடைய நேரடியாக உதவுவதில்லை என்றபோதிலும், அதற்கான பாதையில் அவை முக்கிய அங்கமாக விளங்குகின்றன. பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவை யாகத்திற்கும் பூஜைக்கும் அவசிய தேவைகளாகும்.
காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் மக்களை நரகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் கதவுகள் (பகவத் கீதை 16.21); நவீன நாகரிகத்தின் பெரும்பாலான தொழில்கள் மக்களை இவற்றை நோக்கிக் கொண்டு செல்கின்றன, ஆனால் பசு பராமரிப்போ இவை மூன்றையும் குறைத்து மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லக்கூடியது. மேலும், பசுக்களை அன்புடன் வளர்ப்பது மிகச்சிறந்த புண்ணியம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசுக்கள் இவ்வாழ்வில் மட்டுமின்றி, நமது மறுவாழ்விலும் நமக்கு நன்மை செய்கின்றன. எனவே, பசு பராமரிப்பிற்கான இணையான இன்பத்தை வேறு எந்த தொழிலும் வழங்க இயலாது. பசுக்கள் இயந்திரங்கள் அல்ல பசு பராமரிப்பினை தங்களது தொழிலாக ஏற்றவர்கள் அதனை சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். பசுக்களை பால் தரும் இயந்திரங்களாக கருதக் கூடாது. ஆயினும், பசுக்களை அவ்வாறே நினைக்கும் இன்றைய மக்கள், பாலைப் பெறுவதற்காக எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்: ஊசியைப் போட்டு கருத்தரிக்கச் செய்கின்றனர், பால் கறப்பதற்காக இயந்திரத்தை மடியில் பொருத்துகின்றனர், அதிக பாலைப் பெறுவதற்காக சில தவறான உணவுகள் அல்லது மருந்துகளைக் கொடுக்கின்றனர், மற்றும் பசுக்களை தெருவில் உள்ள போஸ்டர்களையும் குப்பைகளையும் சாப்பிடச் செய்கின்றனர். இவை பசுக்களை அன்புடன் வளர்ப்பவரின் செயல்கள் அல்ல. இயந்திரங்களின் மீது அதிக பற்றுதல் கொண்டுள்ள இன்றைய மக்களே, சற்று சிந்தியுங்கள்: புல்லைக் கொடுத்தால் பாலைக் கொடுக்கும் இயந்திரம் ஏதேனும் உண்டா? நிச்சயம் இல்லை. தயவுசெய்து, பசுக்களை இயந்திரங்களாக பார்க்க வேண்டாம்; தங்களின் அன்பையும் பண்பையும் எதிர்பார்க்கும் ஒரு குடும்ப உறுப்பினராகப் பாருங்கள்.
பசுக்களைக் கொல்ல வேண்டாம் இன்றைய உலகில், மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டுள்ள குறைவான மக்களில் பெரும்பாலானோர், பசுவின் மடியில் பால் வற்றியபின்னர், அதனைக் கசாப்புக்கூடங்களுக்கு விற்று விடுகின்றனர். இச்செயல் மாபெரும் குற்றமாகும். இதில் ஈடுபடுவோர் ஒருகாலத்திலும் மாடுகளை மேய்ப்பதன் உண்மையான புண்ணியத்தை அடைய முடியாது; மாறாக, கடுமையான பாவ விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மனித சமுதாயத்திற்கு நன்மை வழங்குவதற்காகவே வாழும் பசு, நம் அனைவருக்கும் தாய் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. பால் கொடுக்கும்போது தாயை மதிப்பதும், மடியில் பால் இல்லாதபோது அவளை வெட்டித் திண்பதும் மனிதர்களின் செயலா? நிச்சயம் இல்லை; ஆனால் இன்றைய பாரத பூமியில் ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் பசுக்கள் கசாப்புக்கூடங்களுக்குச் செல்கின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.
மனித சமுதாயம் பசுக்களின் சுயநலமற்ற தொண்டிற்காக என்றென்றும் கடன்பட்டுள்ளது. பசுவிடமிருந்து நாம் பெறும் ஒவ்வொரு பொருளும் அளவிட முடியாத நன்மையைத் தருகின்றன. கொஞ்சமாவது புத்தியுள்ளவன் பசுவைக் கொல்வது தவறு என்று நிச்சயம் கருதுவான். பண்டைய பாரத பாரம்பரியத்தில், பசுக்கள் எந்த சூழ்நிலையிலும் கொல்லப்படக் கூடாதவை என்று சொல்லப்படுகின்றன. அசைவ உணவினைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் சில நெறிமுறைகளுடன் மற்ற மிருகங்களின் மாமிசத்தை உண்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்; ஆனால் எக்காரணம் கொண்டும் யாரும் பசுவைக் கொல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பசுவைக் கொல்லும் சமுதாயத்தில் செல்வமோ அமைதியோ சாத்தியமில்லை. பசுவதை உலகின் (குறிப்பாக, இந்தியாவின்) பல்வேறு பிரச்சனைகளுக்கான மிக முக்கிய காரணம் என்பதை ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் புரிந்துகொண்டு, பசுக்களை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் ஆர்வத்தைக் காட்ட வேண்டும். கிருஷ்ணர் ஒரு மாடு மேய்ப்பவர் இவ்வளவு விளக்கங்களுக்குப் பின்னரும், மாடு மேய்ப்பது கேவலம் என்று நினைப்பவர்கள், முழுமுதற் கடவுள் அவரது ஆன்மீக உலகில் என்ன செய்கிறார் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். கடவுள் எந்த செயலை வேண்டுமானாலும் செய்யலாம், அவர் எதைச் செய்தாலும் அஃது அற்புதமானதே. இருப்பினும், அவர் ஒரு மாடு மேய்ப்பவராக உள்ளார் என்பதை உணருங்கள். அவருடைய உலகம், கோலோகம் (பசுக்களின் உலகம்) என்று அழைக்கப்படுகிறது; அவருடைய பெயர், கோவிந்தன் (பசுக்களுக்கு இன்பமளிப்பவர்), கோபாலன் (பசுக்களைப் பராமரிப்பவர்); அவருக்கு பிடித்தமான உணவு, பால், தயிர், வெண்ணெய்; அங்குள்ள அனைவருக்கும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும்) இருக்கும் ஒரே தொழில், பசுக்களைப் பராமரித்தல். இவ்வாறு இருக்கும்போது, முழுமுதற் கடவுளுடன் அவரது நித்திய லீலையில் ஆனந்தமாக பங்குகொள்ள விரும்புவோர், அவர் செய்யும் தொழிலினை அவதூறாகப் பேசினாலோ நினைத்தாலோ, அங்கு செல்வதற்கான விருப்பம் அவர்களுக்கு எவ்வாறு ஏற்படும்? அவர்கள் எவ்வாறு அங்கே செல்ல முடியும்? கிருஷ்ண பக்தியை ஏற்பவர்கள் அனைவரும் இந்த ஒரு தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று யாம் கூறுவதில்லை; அஃது இந்த ஜடவுலகில் சாத்தியமும் இல்லை. ஆனால் இதனை தரக்குறைவாக நினைத்தல் சற்றும் ஏற்கத்தக்கதல்ல என்பதையே இங்கு வலியுறுத்துகிறோம். இன்றைய உலகத்தில் சாத்தியமா? நவீன வாழ்வில் பசு பராமரிப்பும் அதனால் அடையப்படும் இன்பமும் சாத்தியமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை பதிலாகக் கூறலாம். சாஸ்திரங்களும் நமது ஆச்சாரியர்களும் பசு பராமரிப்பினை உயர்வாகக் கூறியுள்ளனர். சில கேலிகளும் சோதனைகளும் இருந்தால்கூட பசு பராமரிப்பினை ஆர்வத்துடன் மேற்கொள்பவர்கள் காலப்போக்கில், பசுக்கள் தங்களைப் பராமரிப்பதை உணர்வர். அதுவே உண்மை. பசுவை நாம் பராமரித்தால், அவை நம்மை நன்றாக பராமரிக்கும். பசு வளர்ப்பதில் அனுபவம் பெறாதவர்கள் தொடக்கத்தில் சில சிரமங்களை அல்லது சவால்களை உணரலாம். எதில்தான் சிரமங்கள் இல்லை? எதில்தான் சவால்கள் இல்லை? தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் சவால் இல்லையா? கல்லூரிக்குச் சென்று பாடம் கற்பதில் சவால் இல்லையா? கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்ப்பதில் சவால் இல்லையா? இந்த மோசமான கலி யுகத்தில், எதில்தான் சவால் இல்லை?
சவாலை சமாளித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் என்று அறிவுரை வழங்கும் பலர், பசு பராமரிப்பு என்று வரும்போது மட்டும், “எதற்கு சார் ரிஸ்க் எடுக்கிறீங்க?” என்று கேள்வி எழுப்புவது நியாயமல்ல. உண்மையில், மற்ற தொழில்களுடன் ஒப்பிடும்போது, மாடு மேய்த்தல் என்பது ரிஸ்க் குறைவாக உள்ள தொழில் என்பதே உண்மை. பசுக்கள் அன்றும் இன்றும் என்றுமே மனிதர்களுக்கு நிரந்தர நன்மையைக் கொடுப்பவை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. மாடு மேய்ப்பதை கேவலமாக நினைத்து கேலி செய்பவர்கள் தொழிற்சாலைகளை சற்று நினைத்துப் பார்க்கட்டும். தொழிற்சாலைகள் இன்றைய சமுதாயத்திற்கு வழங்கும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. எந்த தீமையும் கொடுக்காமல், நன்மை கொடுப்பதை மட்டுமே தனது தர்மமாகக் கொண்டுள்ள மாடுகளை மேய்ப்பதை கேவலமாக நினைத்தல் நிச்சயம் கேவலமான எண்ணமாகும்.
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவின் தொகுப்பாசிரியராகத் தொண்டு புரிந்து வருகிறார்.
புதுப்பிக்கப்பட்டது: 18 ஜனவரி, 2017